அனைவரையும் சிந்திக்க செய்யும் சிறப்பான சிறுகதை
மேகலையின் வாழ்வில் ஒரு நாள்...
மேகலையின் குடும்பம் மூன்று பேர் மட்டுமே உடைய மிகச்சிறிய குடும்பம். மேகலையின் குடும்ப உறுப்பினர்கள்- அவள், அவள் கணவர் மற்றும் அவர்களது செல்ல மகள் பானு.
குடும்பத்தின் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவள் மேகலை. ஆனால், பொதுநலன் என வரும் வேளையில் தனக்கு அவற்றின் மீது அபிப்பிராயம் இல்லை என்று கூறி ஒதுங்கிவிடும் பண்புடையவள்.
மூன்று வயதே நிரம்பிய பானு பல்வேறு சுட்டிக்குறும்புகள் செய்யும் சுறுசுறுப்பான குழந்தை. பானு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்த்துக் கொண்டிருந்த கணவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் என நினைத்து மேகலை மளிகை கடைக்கு சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து, கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மேகலை. வீடு திரும்பும்போது வழியில் இருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து யாரோ ஒருவருடைய முனகல் சத்தம் வருவதை உணர்ந்தாள் மேகலை. எனினும் வீண் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கியபடி வீட்டை அடைந்தாள்.
வீட்டை அடைந்த மேகலை தன் மகளுக்காக வாங்கிய மிட்டாய்களை கொடுக்க 'பானு' என தோட்டத்தை நோக்கி சத்தம் போட்டு அழைத்தாள். அங்கு வந்த அவள் கணவர், பானு தோட்டத்தில் இல்லை என கூறினார். எனவே, இருவரும் பானுவை வீடு முழுவதும் தேடினர்.
வீடு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால் பதற்றத்தோடு வீட்டின் அக்கம்பக்கத்திலும் குழந்தையைத் தேடினர். சாலையில் சிறுதொலைவில் மக்கள் கூட்டமாய் நிற்பதை கண்ட அத்தம்பதியரின் மனத்துடிப்பிற்கு அளவே இல்லை.
கூட்டத்தை கண்ட நொடியில் கூட்டத்தை நோக்கி பயத்தோடு ஓடிச்சென்றனர் இருவரும். கூட்டத்தின் நடுவே தங்கள் மகளைக் கண்டபிறகே அவர்கள் மனம் ஆறுதல் பெற்றது. குழந்தையை பார்த்த பிறகு மேகலைக்கு தொட்டியிலிருந்து வந்த முனகல் தன் குழந்தை பானுவுடையது தான் என புரிந்தது.
தனக்கு தன் குழந்தையை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்தும் காப்பாற்றாததை எண்ணி மனம் நொந்தாள். நீரில் மூழ்கும் முன் தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய வழிப்போக்கரிடம், பொதுநலனோடு தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றியமைக்கு நன்றி தெரிவித்தாள் மேகலை. மேகலையின் வாழ்வில் இந்த நாள் பொதுநலனையும் தன்னலனாய் பார்க்க வைத்தது.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
மேலும் இதுபோன்ற கதைகளுக்கு, இங்கு தொடவும்...
கதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள். கதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்... 😊சிறுகதையை சிறிதுநேரம் செலவிட்டு முழுமையாய் வாசித்தமைக்கு நன்றி🙏🙏.
😘😍😘
ReplyDelete