அவசியம் வாசிக்க வேண்டிய சிக்கனம் பற்றிய சிறுகதை
உயர்ந்த நீதிகள் தந்து அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம் 👇👇
சேமிப்பின் தேவை
மாலா இளங்கலைப் பட்டதாரி. அவள் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதங்களாக வேலை தேடி வந்தாள். பல மாத கடின முயற்சிக்கு பின், ஒரு தனியார் நிறுவனத்தில் அவளது முயற்சிக்கு பலனாக வேலை கிடைத்தது. தனது பணியை பாராட்டும் வகையில் செய்து வந்தாள் அவள். அவளது தனித்திறமை பலராலும் பாராட்டப்பட்டது.
இவ்வளவு சாமர்த்தியம் கொண்ட மாலாவிடமும் மிகக் கொடிய பழக்கம் ஒன்று இருந்தது. அந்த தீய குணமானது, அவளை தேவையற்ற செலவுகள் செய்ய ஊக்குவித்தது. சேமிப்பின் சிறப்பை அறியாத அவள், தனது சம்பளப் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து வந்தாள்.
அழகு சாதனப் பொருட்கள் மீது அவளுக்கு மிகுந்த ஆர்வம். எனவே, அத்தியாவசியமற்ற அழகு சாதனப் பொருட்களுக்காக தனது சம்பளத்தின் பெரும்பங்கை செலவிட்டு வந்தாள். ஆடம்பரச் செலவிற்காகவும் பணம் செலவு செய்ய தயங்கவில்லை. அவளது இக்குணத்தால், மாதம் முடிவதற்கு முன்பே அடுத்த மாதத்தின் சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.
மாலாவிற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். அவருடைய பெயர் மதன். மதன் பொறியியல் பட்டதாரி. அவர் பெரிய பதவியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், மாலாவைப் போலவே மதனும் சேமிப்பின்றி செலவு செய்யும் பழக்கம் கொண்டவராக இருந்தார். மாலா அழகு சாதன பொருட்கள் மீது செலவு செய்வது போல, பொழுதுபோக்கிற்காக செலவு செய்து வந்தார் மதன். அனைத்து புதிய திரைப்படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவ்விருவரும் மாதம் முடிவதற்குள் தங்கள் சம்பளத்தை செலவு செய்துவிட்டு, தங்கள் பெற்றோரிடம் பணம் வாங்கி செலவு செய்வதையும் பழக்கமாக வைத்திருந்தனர். அத்தியவசியச் செலவுகளை மறந்து, அவசியமற்ற செலவுகளுக்கு முக்கியத்துவம் தரும் குழந்தைகளை எண்ணி மனம் நொந்து வந்தனர் அவர்களது பெற்றோர்.
சேமிப்பின் சிறப்பு அறியாமல் தனது குழந்தைகள் இருவரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதைக் கண்ட பெற்றோர், பலமுறை இடித்துரைத்தும் பார்த்தனர். ஆனால், பலனின்றி போனது. இருவரும் தங்களது சொற்களுக்கு செவி சாய்க்காததால், அவர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
தாங்கள் பணி புரியும் நிறுவனத்தின் விடுதிகளில் தங்கிதான் இருவரும் வேலை பார்த்து வந்தனர். மாதம் முடிவதற்கு பத்து நாட்கள் இருந்த நிலையில், தேவையற்ற செலவுகள் செய்து வழக்கம் போல் பணமின்றி தவித்தனர். எனவே, அன்றாடச் செலவிற்கான பணத்தேவையை பெற்றோரிடம் கூறி செலவிற்கு பணம் கேட்டனர். இம்முறை, இருவரும் எதிர்பார்க்காத வண்ணம் பேரதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்கு.
தாயின் பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்றும் தந்தையின் சம்பளம் தாய் மற்றும் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்கே சரியாக இருந்தது என்றும் அவர்களது பெற்றோர் கூறினர். இதற்கும் மேல் அவர்களால் பெற்றோரிடம் ஒன்றும் கூற இயலவில்லை.
தங்களுடன் பணி புரிவோரிடம் பணம் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு இருவரும் தள்ளப்பட்டனர். மாதத்தின் கடைசி பத்து நாட்களும், அச்சிறிய தொகைக்குள் சிக்கனத்தோடு செலவு செய்து நகர்த்த வேண்டி இருந்தது.
இந்நிகழ்வு, மாலாவிற்கும் மதனுக்கும் சிக்கனத்தின் சிறப்பையும், சேமிப்பின் தேவையையும் உணர்த்தியது. அதற்குப் பின், அன்றாடச் செலவிற்கு பணம் சேமித்து விட்டு அத்தியாவசிய செலவு செய்ய முடிவு செய்தனர். பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரச் செலவு நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போனது. எனவே, அவசியமான அன்றாடச் செலவிற்கு பணம் சேமித்து வைத்த பின், அவசியற்ற செலவுகளுக்கு பணம் செலவிட வேண்டும் என இருவரும் புரிந்து கொண்டனர்.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ )
எங்கள் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் கதைகளை பற்றிய கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்... 😊
சேமிப்பின் சிறப்பை உணர்த்தும் சிறுகதை சிறப்பு
ReplyDeleteSuper story 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😃
ReplyDeleteமிகவும் சிறந்த, சிந்திக்க வைக்கும் சிறுகதை!!
ReplyDeleteSemmma🔥🔥
ReplyDelete