உழைப்பின்றி ஊதியமில்லை என விளக்கும் சிறுகதை
சிந்திக்க வைக்கும் சிறப்பான கருத்துக்கள் கொண்ட சிறுகதை நேரம்👇👇
உழைப்பின்றி ஊதியமில்லை
வரதராஜன் மிகச்சிறந்த உழைப்பாளி. அவர், புத்தக விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும், கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில், தையல் பணியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஐந்தாண்டுகளாக அயராது உழைத்து வரும் வரதராஜனைக் கண்ட சுற்றுவட்டார மக்கள், அவரது உழைப்பைப் போற்றி புகழாரம் சூட்டி வந்தனர். ஆனால், முகிலனின் மனதுக்கு வரதராஜனின் வேலைகள் எதுவும் பாராட்டும் விதத்தில் இருந்ததாகத் தோன்றவில்லை. இவ்வாறு சிந்திக்கும் முகிலன் யார் என அறிவோமோ?, வாருங்கள்.
வரதராஜன் கடை வைத்திருக்கும் தெருவில் வசித்து வரும் கதிர்-மாலா தம்பதியின் ஒரே மகன் முகிலன். முகிலனின் கனவானது, மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டும் என்பதுதான். தினமும் கத்தை கத்தையாய் லட்சக்கணக்கில் பணம் சேர்க்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும், உலகமே வியந்து பார்க்கும் விதத்தில் கோடிக்கணக்கான பணம் செலவழித்து மாளிகை போல் வீடு கட்ட வேண்டும், என நீண்டுக்கொண்டே சென்றது அவனது கனவுகள் பட்டியல்.
இவ்வாறு, கனவு காண்பதிலே தனது காலத்தை நகர்த்தி வந்தான் முகிலன். அவனது செயல்பாடுகள், வெறுங்கையை வைத்து முழம் போட முயற்சி செய்வதைப் போல் இருந்தது. தனது முதுகலைக் கல்லூரி இறுதியாண்டை முடித்தபின்பும், எந்த முயற்சியிலும் ஈடுபடாது உயர்ச்சிக்குக் காத்திருக்கும் மகனை எண்ணி கவலையில் இருந்தனர் முகிலனின் பெற்றோர்.
வரதராஜனின் கடை வீட்டின் அருகில் இருந்ததால், முகிலனின் தந்தை (கதிர்), அங்குச் சென்று அவரோடு நேரம் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கனிவான சொற்கள் பயன்படுத்தும் வரதராஜனிடம், தன் மகனின் செயல்பாடுகளை விளக்கிக் கூறித் தன் கவலையை பகிர்ந்து கொண்டார் கதிர். எனவே, கவலையைப் போக்க எண்ணிய வரதராஜன், மறுநாள் காலை முகிலனை கடைக்கு அனுப்பி வைக்குமாறு கதிரிடம் கூறினார்.
எதிர்ப்புகள் பல தெரிவித்த முகிலனை சமாதானம் செய்து கடைக்கு அனுப்பி வைத்தார் கதிர். புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைப்பதில் உதவி புரிவதற்காக முகிலன் கடைக்குச் சென்றிருந்தான். உதவ வந்தமைக்கு முகிலனிடம் நன்றி தெரிவித்தார் வரதராஜன்.
இருவரும் வேலையை தொடங்கினர். புத்தகங்களை அங்குமிங்கும் சுமந்து அடுக்கி வைத்தபோது, முகிலனால் வரதராஜனின் கடின உழைப்பை உணர முடிந்தது. முகிலனுக்கு பாடம் கற்பிக்க எண்ணிய வரதராஜன், தன் கடையிலுள்ள குறிப்பிட்ட அலமாரியை காலி செய்து வைத்திருந்தார்.
முகிலனை அழைத்து, காலி செய்து வைத்திருந்த அலமாரியில் சுமார் நூறு புத்தகங்கள் இருப்பதாகவும், அவற்றை எடுத்து வரும்படியும் பணிவாகக் கூறினார் வரதராஜன். முகிலன் புத்தகங்களை எடுக்க அலமாரியை அடைந்தான். அங்கே, ஒரு துண்டுச் சீட்டில் நூறு புத்தகங்கள் என எழுதி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.
தான் கண்டெடுத்த தாள் மட்டுமே அந்த அலமாரியில் இருந்ததாக முகிலன் வரதராஜனிடம் கூறினான். சரியாக நூறு புத்தகங்களையும் கொண்டு வந்ததற்கு நன்றி கூறினார் வரதராஜன். எனவே, முகிலன் "இந்தத் தாள் எப்படி நூறு புத்தகங்களுக்குச் சமமாகும்?" என குழப்பத்தோடு வினவினான். முயற்சி செய்யாமலே, கனவுகளை நனவாக்க தங்களால் முடியும்போது, இந்த தாளையும் நூறு புத்தகங்களாய் கருத முடியும் என பணிவாகப் பதிலளித்தார் வரதராஜன்.
வரதராஜனின் வார்த்தைகள், முகிலனுக்கு, அவனது தவறுகளைச் சுட்டிக்காட்டியது. முகிலன், தன் தவறை உணர்த்திய வரதராஜனுக்கு நன்றி கூறிவிட்டு நகர்ந்து சென்றான், உழைத்து கனவுகளை கரம்பிடிக்கும் நோக்கோடு...
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
கதை பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள். மேலும் கதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்...😄
கதை மிக்க நன்றாக இருக்கிறது.
ReplyDelete👌👌
Very nice story👌
ReplyDeleteசிந்திக்க வைக்கும் அருமையான சிறுகதைகளை எழுதியமைக்கு நன்றி சுபஸ்ரீ,
ReplyDeleteஇன்னும் உனது எழுத்துப் பணி தொடர ,உயர நான் மனமார வாழ்த்துகிறேன் 🙂.
👍👍👍🔥
ReplyDelete