வாசிக்க வேண்டிய காமராசரின் வாழ்க்கை வரலாறு

கர்மவீரர் காமராசர் பிறந்த தினமான ஜீலை 15 ஆம் நாள் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவது நம்மில் பலர் அறிந்ததே! 

K. Kamarajar-the great-leader


செய்வதற்கரிய பல செயல்களை தன் தனித்திறனால் செயல்படுத்தி வெற்றிக்கண்ட பெருந்தலைவர் காமராசரது வாழ்க்கை வரலாற்றை அவர் அவதார தினமான இன்று பகிர்வதில் பேரின்பம் அடைகிறேன். 

இளமை வாழ்க்கை:-

விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி என்பவர்க்கும் சிவகாசி அம்மையார்க்கும் 15 ஜுலை 1903 ஆம் ஆண்டு குழந்தையாக அவதரித்தார் காமராசர். அவர் காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு அன்போடு வளர்க்கப்பட்டு வந்தார். ஆறாம் வகுப்பு பயின்று வந்த போது காமராசரின் தந்தை எதிர்பாரா வண்ணம் இறைவனடி சேர்ந்தார். 

வறுமையால் வாடிய இளமைப்பருவம்:

தந்தையை இழந்த காமராசரின் வாழ்வில் வறுமை வருகை தந்தது. வறுமையின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை விடுவிக்கவும் தாயிற்கு உறுதுணையாக இருக்கவும் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு இளமையிலே வேலைக்கு செல்ல முற்பட்டார். 

விடுதலை வேட்கை:-

தன் மாமாவின் கடையில் வேலை செய்து வந்த காலத்திலே நாட்டின் மீதான பற்றில் பொதுக்கூட்டங்கள் மற்றும் சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டினார். ஜாலின்வாலாபாக் படுகொலை பற்றி அறிந்த பின், அவரது மனதில் விடுதலைக்கான வேட்கை அதிகரித்தது. சுதந்திர இந்தியாவில் சுகமாக வாழும் மக்களைக் காண விரும்பினார். எனவே சுதந்திர போராட்டங்கள் பலவற்றில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.  

அரசியல் பிரவேசம்:-

மக்கள் நலனில் ஆர்வம் கொண்ட அவர்,  அரசியலில் இணைய முடிவு செய்தார். எனவே, தனது பதினெட்டாவது வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் முதலாக பல சுதந்திர போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கு பெற்றார். 

சிறைவாழ்க்கை:-

விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றக் காரணத்தால் ஆறு முறை ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார். எனவே, ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளை சிறைவாழ்க்கையிலே தொலைக்க நேர்ந்தது. 3000 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டுக் கிடந்தாலும் சுதந்திர நாட்டை உருவாக்கும் நோக்கில் அவர் ஒருபோதும் மனம் தளர்ந்து போகவில்லை. பல்வேறு போராட்டத்திற்குப் பின் இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 

மக்கள் நலனில் முதல்வராய்:-

ஏப்ரல் 13, 1954 அன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் காமராசர். இவர் ஆட்சி புரிந்த காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என கூறினாலும் அது மிகையாகாது. முதல்வராக அவர் ஆற்றிய பணிகள் பலப்பல. அவற்றுள் சில

  • கல்வியில் சமத்துவம் பரப்ப விரும்பிய அவர் குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார்.

  • வயிற்றுப் பசியால் வாடும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி ஆகி விடக் கூடாது என்பதற்காக, மதிப்பு மிக்க மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டார். 

  • அவர் ஆட்சி செய்த காலத்தில், கிராமந்தோறும் குறைந்தபட்சம் ஒரு ஆரம்பப்பள்ளி நிறுவப்பட்டது மற்றும் பஞ்சாயத்து தோறும் குறைந்தபட்சம் ஒரு உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. 

  • குழந்தைகளின் மனதில் வேற்றுமைகளைக் களைய விரும்பிய அவர், சீர்மிகு சீருடைத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டுவந்தார். 

  • தன் வாழ்வில் எட்டாக்கனியாய் போன கல்வியை இனிவரும் காலத்திலாவது அனைவரும் எளிமையாக பெற வேண்டும் என பல்வேறு திட்டத்தை கொண்டு வந்த படிக்காத மேதை என சிறப்பு பெற்றார்.  

  • பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் இவர் ஆட்சிக்காலத்தில் வேரூன்றியது. தொழில்கள் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தினார். 

  • விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, நீர்பாசன வசதிகளுக்கு ஏற்றவாறு 9 அணைகள் இவரது ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. 
பல தலைசிறந்த திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி புரிந்த காமராசர் பல மாநில முதல்வர்களுக்கும் இன்றவரை முன்னோடியாகத் திகழ்கிறார். 

கிங்மேக்கர்:-

லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை தேசத்தின் பிரதமராக தேர்வு செய்து தலைவர்களை உருவாக்கியதால் 'கிங் மேக்கர்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இறக்கும்வரை பணியாற்றினார். 

என்றுமே எளிமை:-

நாட்டின் முதல்வராக பதவி வகித்த போதிலும் எளிமையையே என்றும் கடைப்பிடித்தார். அவர் அவசியமற்ற செலவுகளை ஒருபோதும் செய்தது இல்லை. 

காமராசர் இறந்தபோது அவர் விட்டுச்சென்ற சொத்துக்கணக்கு:- 

சட்டைப் பையில் 100 ரூபாய், வங்கிக் கணக்கில் 120 ரூபாய், 4 சட்டை, 4 வேட்டி, இரண்டு ஜோடி செருப்பு மற்றும் சில புத்தகங்கள் மட்டுமே. 

அவரது சொத்துக்கணக்கு அவர் எளிமையை மிக எளிதாக பறைசாற்றி உள்ளது. 

இறப்பு:-

ஒன்பது ஆண்டு காலங்கள் முதல்வராய் நல்லாட்சி புரிந்த பெருந்தலைவர் காமராசர் மாரடைப்பால் மரணம் தழுவினார். தனது 72 ஆவது அகவையில் உலகவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். 


மக்கள் நலனுக்காக பலப்பல அறப்பணிகளில் ஈடுபட்டு, தனக்கென வாழாது தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்பணித்து விட்டார் சீர்மிகு தலைவர் காமராசர்.
புவி உள்ள வரை அவர் புகழ் அழியாது!! 

(கட்டுரையை இயற்றியவர் சுபஸ்ரீ) 

கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர தயங்காதீர்!! 

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog