சிறந்த கருத்துக்கள் கொண்ட சிறந்த சிறுகதை நேரம்
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய "அறக்கோவில்" என்ற அற்புதமான சிறுகதை 👇👇
அறக்கோவில்
நாளடைவில், மாளிகை போல் பிரம்மாண்டக் காட்சி தரும் தான் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தார். அவர் இறைத்தொண்டை இன்றியமையாத தொண்டாக கருதினார். எனவே, ஆலயம் எழுப்ப செய்ய வேண்டிய பணிகளைத் தாமதிக்காது தொடங்க முடிவு செய்தார்.
'ஆலயம் எழுப்ப எவ்வளவு பணம் செலவாகும்?' என தீவிரச் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவரை வாயில் மணியோசை வெகுவாக திசை திருப்பியது. 'இந்நேரம் யாருடைய தொந்தரவு?' என மனம் நொந்து கொண்டு, வாயிலில் நிற்பவரை உள்ளே அழைத்து வருமாறு தன் வேலையாளிடம் கட்டளையிட்டார்.
எஜமானரின் கட்டளைக்கு அடிபணிந்து, வாயிலில் நின்றவரை வீட்டிற்குள் அழைத்து வந்தார் வேலையாள். தன்னைத் தேடி வந்தவரிடம், வருகைக்கான காரணத்தை வினவினார் செல்வந்தர். செல்வந்தரின் கேள்விக்கு பணிவுடன் பதிலளிக்க தொடங்கினார் அவர்.
"ஐயா! என் பெயர் இனியன். நான் அருகிலுள்ள கிராமத்திலிருந்து உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். எங்கள் ஊரில் பள்ளிகள் இல்லாத காரணத்தால், ஊரிலுள்ள குழந்தைகள் கல்வி கற்க பல மைல்கள் தூரத்தை தாண்டி வேறு ஊருக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பல குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுச் செல்வதையும் நாங்கள் கவலையோடு கண்டு வருகிறோம். எனவே, எங்கள் கிராமத்தில் கல்வி முன்னேற்றம் ஏற்பட, நீங்கள் முன்வந்து பள்ளி ஒன்றை எழுப்பித் தந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்" என தாழ்மையுடன் வேண்டினார் இனியன்.
செல்வந்தர்க்கு இனியனது கிராமத்தின் சூழல் கவலையைத் தந்தது. ஆனால், பள்ளி அல்லது கோவில், இதில் ஏதேனும் ஒன்றை கட்டும் அளவிற்கு மட்டுமே தன்னிடம் பணமிருக்கும் என உணர்ந்த செல்வந்தர் சிந்திக்கலானார். எனவே, முடிவு எதுவும் எடுக்க முடியாத குழப்பமான மனநிலையில் இருந்தார் அவர். ஆதலால், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்க வருமாறு பணிவுடன் கூறி இனியனை வழியனுப்பி வைத்தார்.
இனியன் விடைபெற்றுச் சென்றார். கோவில் எழுப்ப எண்ணிக் கொண்டிருந்த செல்வந்தரது மனம், முடிவு எடுக்க முடியாமல் மிகவும் தவித்தது. அன்றைய நாள் முழுவதையும் குழப்பத்தில் கழித்த செல்வந்தர், மறுநாள் காலையில் இறைவனை வழிபட்டு வந்தால் மன அமைதியும் குழப்பத்திலிருந்து தீர்வும் கிடைக்கும் என கோவிலை நோக்கிச் சென்றார்.
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டும் மனக்குழப்பம் தீரவில்லை அவருக்கு. எனினும், செல்வந்தர் வீடு திரும்ப தன் வாகனத்தில் புறப்பட்டார். கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் பிரதான சாலையருகே மயங்கி விழுவதைக் கண்டார் அவர். விரைவாக அந்த மாணவனை வீதியில் இருந்து மீட்டு, நீர் தெளித்து எழுப்பிய செல்வந்தர், சிறுவன் அதிக காய்ச்சல் காரணமாக வீதியில் வீழ்ந்ததை தெரிந்து கொண்டார். எனவே, சிறுவனை அவனது வீட்டிற்கே கொண்டு போய் சேர்த்தார்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரம் என்பதால், சிறுவனை எதிர்பார்த்து சிறுவனின் தாய் வீட்டில் காத்துக் கொண்டிருந்தாள். சிறுவனை தாயிடம் சேர்த்த செல்வந்தர் நிகழ்ந்த அனைத்தையும் கூறினார். தனது மகனின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த செல்வந்தரின் உருவிலே தான் இறைவனைக் காண்பதாகக் கூறி சிறுவனின் தாய் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வு செல்வந்தருக்கு புகட்டிய நியதி: பூசைகள் பல செய்து, இறைவனைத் தேடி, இறையருள் வேண்டி நிற்பதை விட, முழுமனதோடு அறப்பணியில் ஈடுபட்டு அனைவரிடமும் அன்பு பாராட்டினாலே இறையருள் எளிதில் கிடைக்கும். இந்த நிகழ்விற்கு பிறகு, இனியனின் கிராமத்தில் இனிய மனதுடன் பள்ளி எழுப்ப முன் வந்தார் செல்வந்தர். அனைவருக்கும் உதவும் நோக்கில் தனது வீட்டின் ஒரு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நிறுவி அன்புடன் அறம் பின்பற்றலானார். தொண்டு நிறுவனத்தின் பெயரை "அறக்கோவில்" என பெயரிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ
மேலும் கதைகளை வாசிக்க கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கதைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.
மிகவும் அருமையான கதை!!
ReplyDelete🔥🔥👏👏
"அன்போடு அறம் செய்தலே இறைவனை கண்டறியும் வழி "
ReplyDeleteஎன்று இக்கதை மூலம் தெரிந்து கொண்டேன் 😌👍👍.
இந்த கதை மிகவும் அற்புதமாக இருந்தது 😇👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏