கொரோனா காலத்தை விளக்கும் குறுங்கவிதைகள்
கொரோனா காலத்தை விவரிக்கும் எங்களது குறுங்கவிதைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுங்கள்.
(1) கொரோனாவும் கொடிய பசியும்:
மாயனே அரக்கனே கொரோனா,
மிரட்டி ஓடவைத்தாய் என்னையும் என் மக்களையும்;
ஓடினோம் ஓடினோம் கொரோனா என்ற எமனுக்கு பயந்து,
மூடினோம் நம் நாட்டு எல்லைகள் அத்துணையும்;
ஒளிந்து கொண்டோம், முகத்தை மூடிக் கொண்டோம்;
எமனிடமிருந்து தப்பித்துக் கொண்டோம் என எண்ணினோம்,
ஆனால் சிக்கிக்கொண்டோம் பசி என்ற கொடூரனிடம்,
வேலையை இழந்தோம், ஊதியத்தை தொலைத்தோம்;
ஊதியமின்றி உணவின்றி தவிக்கிறோம்;
கொடூரன் பசியை விட கொரோனாவே மேல் என்று அறிந்து கொண்டோம்.
(2)இன்னலிலே என் தமிழ் மக்கள்:
வாகனங்கள் இல்லை சாலைகளில்,
கடைகள் இல்லை தெருக்கோடிகளில்,
பிள்ளைகள் இல்லை கல்விக்கூடங்களில்,
மணி ஓசைகள் இல்லை கோவில்களில்,
சமூகமோ வீழ்ந்தது கொரோனா பயத்துக்குள்ளே,
பொருளாதாரமோ வீழ்ந்தது ஊரடங்கினாலே,
வீடு என்ற சிறைச்சாலையிலே;
வாடுகிறார்கள் என் தமிழ் மக்கள்!!
(3) ஊரடங்கால் மறந்த நாட்டுப்புறக்கலை:
மனதினுள் தெய்வத்தை சுமந்தான்,
தலையிலே கரகத்தை சுமந்தான்,
கால்கள் ஆடின கரகாட்டம்.
கட்டைக்கால் மேலே நின்றான்,
வானத்தையே மெல்ல ரசித்தான்,
ஆடினான் கொக்காலிக் கட்டை ஆட்டம்.
தெய்வீக கதைகள் கேட்டு ரசிக்க,
பாவைக்கூத்தை பார்த்து ரசிக்க,
அரங்கேற்றினார்கள் பொம்மலாட்டம்.
நாதசுவரங்கள் முழங்க,
மேலதாளங்கள் இசைக்க,
ஆரம்பமாகிறது மயிலாட்டம்.
மக்கள் மனது மகிழ்ச்சியில் பொங்க,
வாத்தியங்கள் வீதியில் இசைக்க,
ஆரம்பம் ஆகிறது ஒயிலாட்டம்.
மண்ணோடு இணைந்த கலை,
மனதோடு பிணைந்த கலை,
உணர்வுகளை தொட்ட கலை,
கொரோனாவால் முடங்கிய கலை,
ஊரடங்கால் மறந்த கலை,
நமது நாட்டுபுறக்கலை.
கவிதைகள் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்.
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.